சேலத்தில் அரசு பள்ளியில் ஆசிரியையை வெட்டி கொன்ற கணவர்.மகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை..

Total Views : 15
Zoom In Zoom Out Read Later Print

அரசு பள்ளியில் வைத்தே ஆசிரியை ஒருவரை அவரது கணவரே வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்து தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தன் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்தது தெரியவந்தது. நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

சேலம்:சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக ஸ்ரீவித்யா (வயது 44) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் விஜயமுருகன். காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

எனினும் திருமணம் ஆனாலும் குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் இன்று ஸ்ரீவித்யா பள்ளிக்கு காலையில் வந்தார். அப்போது அவர் தன் மகளையும் சமீப நாட்களாக அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது கணவர் விஜயமுருகன் கண்காணித்து வந்துள்ளார்.


இந்த நிலையில் இன்று பள்ளியில் தேர்வு நடந்ததால், கண்காணிப்பு பணியில் ஸ்ரீவித்யா ஈடுபட்டு இருந்தார். அப்போது மிஸ் உங்களை ஒருவர் கூப்பிடுவதாக கூறிவிட்டு இரண்டு மாணவிகள் சென்றனர். உடனே அவரும் எக்ஸாம் ஹாலை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது கணவர் விஜயமுருகன் தான் வைத்திருந்த ஆட்டுக் கறி வெட்டும் அரிவாளை வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஸ்ரீவித்யா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இத்ற்கிடையே பள்ளியில் வைத்து மனைவியை வெட்டி கொன்று விட்டு கணவர் விஜயமுருகன் தப்பி ஓடிவிட்டார். குழந்தையையும் தூக்கி சென்றுவிட்டார். பள்ளியில் வைத்து ஆசிரியை வெட்டி கொல்லப்பட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாலையில் பள்ளியில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்தில் சிறுமி மற்றும் ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர். உடனே மீட்டு விசாரித்ததில் விஜயமுருகன் தான் 3 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு அவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


See More

Latest Photos