SIR பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் SIR எதிரொலி.. 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த அதிர்ச்சி!
சென்னை:SIR பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தகுதியான வாக்காளர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளில் ஈடுபடுவோம் என்று கூறிய ஆர்.எஸ்.பாரதி, அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடி எண்ணிக்கையை உயர்த்தியது எப்படி என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் SIR பணிகள் நாளையுடன் முடிவடையக் கூடிய சூழலில், சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை வாக்குகள் வைத்திருப்பவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தகுதிவாய்ந்த வாக்காளர்களும் நீக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இதனால் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க திமுகவினர் தொடர்ந்து களத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கூடாரம் அமைத்து SIR விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், SIR மூலமாக 80 முதல் 85 சதவிகித வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதற்கு திமுகவே முழு காரணம்.
திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் களத்தில் இருந்து கட்சி சார்பின்றி SIR பணிகளில் ஈடுபட்டனர். அது ஓரளவிற்கு நிறைவு பெற்றுள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. எவ்வளவு பேர் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின் தெரிய வரும். சுமார் 85 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
இது எந்த அளவிற்கு உண்மையென்று புள்ளி விவரங்களோடு வந்தால் தான் தெரியும். டிசம்பர் 19ஆம் தேதிக்கு பின்னர் தான் கவனமாக செயல்பட வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. இதனை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் சொல்லி இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதன்பின் நீக்கப்பட்டவர்கள் யார் யார் என்பதை ஆராய்ந்து அவர்களுக்கான வாக்குகளை உறுதி செய்ய அறிவுறுத்தி இருக்கிறோம். இதனை பற்றியெல்லாம் பேச எடப்பாடி பழனிசாமிக்கு கவலையில்லை. இந்தியாவிலேயே SIR வேண்டும் என்று நீதிமன்றம் சென்ற ஒரே கட்சி அதிமுக தான். அதிமுகவில் இருந்து சிலர் திமுகவுக்கு செல்லலாமா, நடிகர் கட்சிக்கு செல்லலமா என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.
எதன் அடிப்படையில் வாக்குச்சாவடி உயர்த்தப்பட்டது என்பது தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும். அதனை சட்டத்துறை பார்த்துக் கொள்வோம். லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடி 8 முறை வந்தார். அமித்ஷா அடிக்கடி வந்தார்.. எங்களுக்கு முழு தொகுதியும் கிடைத்தது. அதனால் அமித்ஷா மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கேயே இருக்க வேண்டும். அப்போதுதான் திமுக 202 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.