தேர்தல் பூதம் !

Total Views : 42
Zoom In Zoom Out Read Later Print

தேர்தல் பூதம் !

மலையை வெட்டி 

  மடுவை நிரப்பியது !

மேட்டை உடைத்துப்

   பள்ளத்தில் கொட்டியது !

கடல்நீர் எடுத்துக்

  கலயத்தில் சேர்த்தது !

நுகராக் காற்றை

  நுரையீரலுக் களித்தது !


பணக்காரன் உணவைப்

  பசித்தவனுக்குத் தந்தது !

செல்வந்தன் காசைச்

  செலவாளிக் கீந்தது !

ஏய்ப்போர் பொருளை

  ஏமாளிக்கு கொடுத்தது !

காய்த்த மரங்களின்

  கனிகிடைக்க செய்தது !


ஆஸ்தியும் உள்ளோரை

   அழிக்கவும் வைத்தது !

வேஷ்டியைக் கிழித்துக்

  கோவணமாய்க் கொடுத்தது !

ஆலையதிபர் சொத்தை

   அடுத்தவர்க்கு கொடுத்தது !

பால்குடிப்போர் சிறுதுளியைப்

   பாமரர்க்கு அளித்தது !


பஞ்சாமிர் தமறியோர்க்குப்

  பக்கமிருந்து ஊட்டியது !

கஞ்சியைக் குடிப்போர்க்குக்

  கறிசோறு போட்டது !

பழையசோறு உண்பவனுக்குப்

   பிரியாணி கொடுத்தது !

கலயத்தின் கஞ்சியையும்

  கள்ளாக மாற்றியது !


கோபுரத்தின் வெளிச்சத்தைக்

   குடிசைக்குள் செலுத்தியது !

பாவத்தின் விமோசனத்தைப்

  பக்தனுக்கு அருளியது !

ஆலமர நிழலையும்

   அரளிக்குத் தந்தது !

மாளிகையின் பார்வையை

   மண்குடிலுக் கீந்தது !


      கவிஞர்.அ.முத்துசாமி , தாரமங்கலம் .

See More

Latest Photos