ஓசூர் சட்டசபை தொகுதியில் திமுகவுக்கு தனியாக ஒரு சென்டிமென்ட் உள்ளது. கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஓசூர் தொகுதியில் பிரசாரம் செய்த காலங்களில் வேட்பாளர்கள் வெற்றி - தோல்வியை தாண்டி அக்கட்சி ஆட்சி அமைக்கவில்லை. பிரசாரம் செய்ய வராத தேர்தல்களில் ஆட்சியை பிடித்தது.
ஓசூரில் பிரசாரம்; தப்புவாரா ஸ்டாலின்?
கிருஷ்ணகிரி:1991ல் திமுக கூட்டணி பலத்துடன் போட்டியிட்ட ஜனதா தள் வேட்பாளர் வெங்கடசாமியை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தார். 2001 தேர்தலில் பாஜ வேட்பாளர் வெங்கடசாமிக்கு ஆதரவாகவும், 2011ல் காங்., வேட்பாளர் கோபிநாத்துக்கு ஆதரவாகவும் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இந்த தேர்தல்களில் திமுக ஆட்சி அமைக்கவில்லை.
2019ல் தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. அதில் ஓசூரும் ஒன்று. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. அதை மனதில் வைத்து, ஓசூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். திமுக வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றார். ஆனால் தமிழக அளவில் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை
1989, 1996, 2006, 2021 சட்டசபை தேர்தல்களில், கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஓசூர் பிரசாரத்திற்கு வரவில்லை. அத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஓசூர் தொகுதியில் பிரசாரம் செய்தால் ஆட்சியமைக்க முடியாது என்ற சென்டிமென்ட் திமுகவுக்கு உள்ளது.
இத்தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் வரும் 19ம் தேதி ஓசூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல இடங்கள் பார்க்கப்பட்டு, கடைசியில் வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஓசூர் பகுதி சென்டிமென்ட் காரணமாக வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இடத்தை தேர்வு செய்துள்ளதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.