டாஸ்மாக் கடைகளில் ரூ.20 கூடுதலாக வசூலிக்கப்படுவதால், ஊழியர்களுடன் வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டு வருகிறது.
டாஸ்மாக் ஊழியர்களுடன் வாக்குவாதம், சண்டை பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 வசூல்:
சென்னை:தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன.டாஸ்மாக் கடைகளில் ரூ.20 கூடுதலாக வசூலிக்கப்படுவதால், ஊழியர்களுடன் வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டு வருகிறது.
இந்த கடைகளில் சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு ரூ.150 கோடிக்கும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை நாட்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுகிறது.
மொத்தத்தில், டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசு ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடிக்கு வருமானம் ஈட்டி வருகிறது. இதற்கிடையில், பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
இதனை டாஸ்மாக் நிர்வாகமும் இந்நாள், முன்னாள் அமைச்சர்களும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஆனால், கூடுதலாக பணம் வாங்குவது, அதனால் ஏற்படும் வாக்குவாதம், சண்டைகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
காலி பாட்டில்: இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் காலி பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் தமிழகத்தில் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது ரூ.10 கூடுதலாக விற்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்பத் தரும்பட்சத்தில் ரூ.10-ஐ அவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நிலையில், மேலும் ரூ.10 வசூலித்து பிரத்யேகமான ஸ்டிக்கரை பாட்டில்களில் ஒட்டி கொடுக்கப்படுகிறது. காலி பாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி பாட்டிலுக்கு கூடுதலாக மொத்தம் ரூ.20 வசூலிக்கப்படுவதால், ஊழியர்களுக்கும் மது வாங்க வருபவர்களுக்கும் இடையே வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டு வருகிறது.